tamilnadu

img

அறிவியல் கதிர்

இருளிலும் ஒளி

இன்றைக்கு மின் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் சூரிய ஒளித் தகடுகள் 20சதவீதமே சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் திறன் வாய்ந்தவை.நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 92சதவீதம் வரை மாற்றும் திறன் வாய்ந்த புதியவகை சூரிய ஒளிக் கலங்கள் ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. பாலி எத்திலீன் உறைகளினுள்ளே பதிக்கப்பட்டிருக்கும் நுண்ணிய தங்க இழைகள் ஒளி மாலையில் அகசிவப்பு பகுதியிலும் இயங்குகின்றன.எனவே இரவிலும் மின் உற்பத்தி செய்யும்.நானோ ஆன்டென்னா எனப்படும் இவைகளை அதிக அடுக்குகளில் வைக்கும்போது கார்,வீடுகள்,பிற மின் சாதனங்களை இயக்கும் காலம் ஒரு நாள் வரும்.

பனி வெள்ளம் 
 

கிரீன்லாந்து ஆர்டிக் பெருங்கடலுக்கும்  அட்லாண்டிக்  பெருங்கடலுக்கும் இடையிலுள்ள ஒரு தீவு. இதன் பரப்பளவு .836330சதுர மைல்கள்.இதில் 700000 ச.மைல்கள் பனிப்பாளங்களால் மூடப்பட்டிருக்கிறது. அண்டார்டிக்காவுக்கு அடுத்தபடியாக பனிப்பாளங்கள் கொண்ட பிரதேசம் இது.சராசரியாக 5000அடி கனம் கொண்டவை.அதிகபட்சமாக 10000 அடிவரை கனமானவை.ஐரோப்பா முழுவதும் கடுமையான வெப்பத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் கிரீன்லாந்தில் ஜூலை 31ஆம் தேதி ஒரு நாளிலே 10பில்லியன் டன் ஐஸ் பாளங்கள் உருகி ஆறு போல ஓடியதாம். இது அதன் மேற்பரப்பில் 60 சதவீதம் ஆகும்.

மாற்றங்களின் நியதி 

100 ஆண்டு இந்திய கோடைகால மழைப் பொழிவு(Indian Summer Monsoon (ISM)) தரவுகளை ஆய்வு செய்யும் அல்கோரிதம் (algorithm) ஒன்றை மண்டி நகர ஐ ஐ டி ஆய்வாளர்கள் உண்டாக்கியுள்ளார்கள். கோடைகால மழைப் பொழிவு மாற்றங்களை  ஆய்வு செய்து எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அது மாறுகிறது என்பதைக் கொண்டு எதிர்காலத்தில் அதன் நியதியை அறியும் முறையை ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பலமான மழையும் பலவீனமான மழைப் பொழிவும் ஏற்படுகிறது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

நன்னீர் பெருவிலங்கினங்கள் 

முதலை போன்ற பெரும்பான்மையான நன்னீர் பெருவிலங்குகள் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது என்று குளோபல் சேன்ஜ் பயாலஜி இதழ் அறிக்கை ஒன்று கூறுகிறது.72 நாடுகளிலுள்ள 126 நன்னீர் விலங்கினங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் அவைகளின் எண்ணிக்கை 88% குறைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.இதற்கு அணைகள் கட்டுவது போன்ற மனித நடவடிக்கைகளும் சுற்று சூழல் மாசுபடுவதும் காரணங்கள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மூலக்கூறின் சுழற்சி  ஜெர்மனியிலுள்ள டெசி(DESY) எனும் மிகப் பெரிய ஆய்வு மையம் (particle accelerator centre) துல்லியமாக ஒருமுகப்படுத்தப்பட்ட லேசர் ஒளிக் கற்றைகளைப் பயன்படுத்தி மூலக்கூறின் அதிவேக சுழற்சியைப் படம் பிடித்துள்ளார்கள்.இப்படி படம் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். கார்பனைல் சல்பைடு(OCS) மூலக்கூறின் ஒன்றரை சுழற்சியை இந்தப் படம் காட்டியது.இந்த சுழற்சிகள் ஒரு நொடியில் 125 ட்ரில்லியன் பங்குக்குள் நடைபெறுகின்றனவாம்.

வரலாறு காணாத வெப்பம் 

ஜூலை 2019 வெப்பநிலை வரலாற்றில் இதுவரை பதிவாகியுள்ள உயர்ந்த அளவை எட்டியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் வானிலைக் கழகம் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 29 நாட்களின் வெப்ப நிலையை அடிப்படையாகக் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முன்னால் அதிக அளவு வெப்பம் ஜூலை 2016ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு(2019) வெப்பம் ஆலை உற்பத்தி முறைக்கு முந்திய காலத்தைவிட(pre-industrial era)1.2C அதிகம் என்கிறது இந்த அறிக்கை.

பூமியின் நுரையீரல் எரிகிறது 

அமேசான் காடுகளில் எரியும் தீபுகை  2000மைல்கள் வரை பரவி சா பாலா நகரை இருளில் மூழ்கடித்துள்ளது. இந்த தீ உலகம் முழுவதும் பாதிக்கக்கூடிய ஒன்று என்கிறார் கன்னாட்டிகட்டை சேர்ந்த  பேராசிரியர் ராபின் சாஸ்டன் (Robin Chazdon).இவர் வெப்ப மண்டலக் காடுகளின் சூழலியல் குறித்த ஆய்வாளர் ஆவார். இந்த தீயினால்  வெளிப்படும் கார்பன் பருவ நிலை மாற்றத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். பரவிக்கிடக்கும் அமேசான் மழைக்காடுகள் வெப்பத்தை காற்று மண்டலத்தில் விடாமல் தன்னுள் தக்க வைத்துக்கொள்வதால் பூமியின் சுற்று சூழலில் முக்கியப் பங்காற்றுகின்றன.மேலும் அவைகள் கார்பன் டை ஆக்சைடை சேமித்துக் கொண்டு ஆக்சிஜனை வெளிவிடுவதால் பருவ நிலை மாற்றங்களின் தாக்கத்தையும் குறைக்கின்றன.
 


 

;